
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை ஏற்றியவாறு வீதியில் பயணித்த உழவியந்திரத்தின் (டிராக்டர்) மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மோதி விபத்துக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர நிக்கசீல (வயது-48) என்பவரே உயிரிழந்துள்ளார். செல்வபுரம், பண்டியன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விமல் விக்னேஷ் (வயது-28) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் மல்லாவி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாண்டியன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உழவியந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.