தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிக்கப்பட்டு வருகிறது – ஸ்ரீகாந்தா!

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதிலுள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாம் இப்போது என்ன செய்தோம் என தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது. புதிய அரசியல் அமைப்பு வருமா வரதா என்று உறுதியாக கூற முடியாது.

அப்படி வந்தாலும் அதில் சிங்கள,பெளத்த மேலாதிக்கம் மட்டுமே அதில் இருக்கும். இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது. எமது கடந்த கால அனுபவம் இது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.

அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என ஒரு நாளும் நாம் கூறவுமில்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல் படுத்துங்கள் என தான் கூறுகின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *