
கொழும்பு, ஜனவரி 31:
ரூ.25 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை கடத்தும் முயற்சி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக இலங்கை சுங்கத் துறை மூத்த அதிகாரி கூறியது: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் துபாய் செல்லும் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அவரது உடமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், துபாய் சென்ற மேலும் நால்வரைக் கைதுசெய்ததுடன் அவர்களின் உடமைகளில் பதுக்கி கடத்தப்பட்ட வெளிநாட்டு பணத்தையும் கண்டுபிடித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ, சவுதி ரியால் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 25 மில்லியன் ஆகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.