
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத காணாமல் போன மீனவர் படகை தாக்கியிருக்கலாமென்ற சந்தேகத்தில் எல்லை தாண்டிய இந்திய மீன்பிடி படகை மடக்கி பிடிக்க முற்பட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்குமிடையில் கடலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கடலுக்கு சென்று இதுவரை திரும்பி வராததால் அவர்களை மூன்றாவது நாளாக தேடும் பணிகள் நேற்றும் இடம்பெற்றது.
இத் தேடுதல் பணியில் ஈடுபட்ட வத்திதாயன் மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இழுவை மடி படகை நிறுத்த முற்பட்ட வேளை முரண்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
எல்லை தாண்டிய இந்திய இழுவை மடி படகு தாக்கி காணாமல் போனவர்களது படகு மூழ்கடிக்கப்படலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.
இந்த நிலையிலேயே கடலில் இவ்வாறு இந்திய படகை நிறுத்த வத்திராயன் மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.
மேலும் இதுவரை காணாமல் போன இரண்டு மீனவர்கள் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.