
கொழும்பு, ஜனவரி 31:
தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள், நிகழாண்டு பெப்ரவரி மாத முடிவு வரை (பெப்ரவரி 28) சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. அன்றைய தினம், 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட, உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று மருத்துவ வடடாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள், நிகழாண்டு பெப்ரவரி மாத முடிவு வரை (பெப்ரவரி 28) சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” மக்கள் பூஸ்டர் தடுப்பூசி உள்பட மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், சுகாதார நடைமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று காரணமாக நாடு மீண்டும் ஒரு தடவை முடக்கப்பட்டால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். அவ்வாறான நிலைக்கு நாட்டை கொண்டு செல்லாதிருப்பதற்கான பொறுப்பு, நாட்டு மக்களிடமே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.