
கொழும்பு, ஜனவரி 31: மறு அறிவித்தல் வரை நாட்டில் திட்டமிடப்பட்ட மின் வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் (பெப்ரவரி 1) பெப்ரவரி மாதத்திற்குத் தேவையான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பெப்ரவரி 4 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியது:
ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதிவரை மின் வெட்டுக்கோரிய இலங்கை மின்சார சபையின் முன்மொழிவைத் தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களின் நிலை, எரிபொருள் விநியோகம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்படி, மின்வெட்டு தேவையில்லாததால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மின்சார சபை கூறியபடி, உத்தேச மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தால், ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் சுமார் ரூ. 31 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கும். மின்வெட்டை தடுத்ததன் மூலம் ரூ. 31 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்தது.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் கூட மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்தரப் பரீட்சைகள் பிப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தேர்வில் வெற்றிபெற, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.