
தமிழ் மக்களை இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் – 13ஆம் திருத்தத்துக்குள் முடக்குவதற்கு முன்னெடுக்கப்படும் சதிகளை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்புக்கு அமைவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கிட்டுப்பூங்காவில் நேற்று அணிதிரண்டனர். சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வேண்டும் எனவும், தமிழர் தேசம் மலரட்டும் எனவும் அவர்கள் விண்ணதிரக் கோசம் எழுப்பினர்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான இறுதித் தீர்வை வலியுறுத்தியும், அதற்கு இடைப்பட்ட காலத்தில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் 6 கையெழுத்திட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நேற்றுப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர்க் கோயில் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் ஈகச்சுடரேற்றப்பட்டு பேரணி காலை 10.15 மணியளவில் ஆரம்பமானது. 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கும் குறியீட்டு வடிவம் காட்சிப்படுத்தப்பட்ட வாகனத்தின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டனர். சிவப்பு, மஞ்சள் கொடிகளை ஏந்தியவாறு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
பேரணி நல்லூர் முத்திரைச்சந்திப் பகுதியிலுள்ள கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது.
அங்கு 13ஆம் திருத்தம் என்று எழுதப்பட்ட சவப்பெட்டி வைக்கப்பட்டு அதற்கு ஒப்பாரி வைத்து மேடையில் வைத்தனர். அதன் பின்னர் நேற்றைய போராட்டத்தின் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் கொள்கை விளக்க உரை இடம்பெற்றது.
இதன்போது, ‘கையில் கொடுத்த உறவுகள் எங்கே?’, ‘ஓமந்தையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே?’, ‘வட்டுவாகலில் ஒப்படைத்த உறவுகள் எங்கே?’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’, ‘எமது கடல் எமக்கு வேண்டும்’, ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் – பார்தீபன் கனவு மலரட்டும்’, ‘வேண்டும் வேண்டும் சமஷ்டி வேண்டும்’, ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் – தமிழர் தேசம் மலரட்டும்;’ என்ற கோசங்கள் விண்ணதிர எழுப்பப்பட்டன.