
நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் உள்ளிட்ட 25 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உயரதிகாரியொருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வௌியிட்டுள்ளது,
அத்துடன் கொவிட் தொற்று உறுதியானவர்களுள் நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நாடாளுமன்ற ஊழியர்கள் சிகிச்சைக்ககளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றில் நேற்று 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளிலேயே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 500 கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 82 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 11 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 78 ஆயிரத்து 432 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 21 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 ஆயிரத்து 312 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது