
உள்நாட்டு பொறிமுறையில் ஒரு தீர்வும் கிடைக்காது என காலாகாலமாக நாம் கூறிவருகிறோம். ஆகையால் அந்த கேள்விக்கே இடமில்லை என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று எமது மத உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் எதிப்பை காண்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைக்கான கவனயீர்ப்பு விஜயம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று குறித்த கவனயீப்பு நடவடிக்கையில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 75 பேர் வரையில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.