
யாழ். பல்கலைக்கழக வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் பதாகையை அகற்ற முற்பட்ட பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே நேற்றிரவு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் “சிறீலங்காவின் சுதந்திர தினம் கரிநாள்” என குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பல்கலைகழகத்தின் முன்பாக நேற்று பிற்பகல் 5 மணி முதல் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து 7.30 மணி அளவில் கோப்பாய் பொலிசார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைக்கம் முற்பட்ட வேளை பல்கலை மாணவர்கள் “எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் பொலிசாருடன் வாக்குவாதபட்ட நிலையில் உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தாருங்கள் என தெரிவித்து விட்டு, மாணவர்கள் ஒன்றுகூட குறித்த இடத்திலிருந்து பொலிசார் மெதுவாக நழுவிச் சென்றனர்.
