
கொழும்பு, பெப் 6: மின் நிலுவைத் தொகையைசெலுத்தாதவர்களின், மின் விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை மின்சார சபை (CEB) தீர்மானித்துள்ளது.
இந்த அறிவிப்பை மின் சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “நாட்டில் கொரோனா தொற்று தொடங்கியபோது, மின் நுகர்வோருக்கு சலுகை வழங்கப்பட்டது. அதன்படி, மின் நிலுவைக் கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்படவில்லை.ஆனால், இந்தச் சலுகையை பலர் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது, மின்சாரசபைக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ரூ.44 பில்லியன் ஆக உள்ளது. எனவே, இச்சலுகையை தொடரமுடியாத நிலையில் இலங்கை மின்சார சபை உள்ளது.
எனவே, மாதாந்திர பில் மற்றும் நிலுவைத் தொகையில் அரைவாசியை செலுத்தும் நுகர்வோருக்கு மட்டும் மின் விநியோகத்தை தொடர இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது. இத் தொகையை செலுத்தத் தவறுபவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
மேலும், மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உறுதியளித்துள்ளது. அதன்படி, தேவையான எரிபொருள் வழங்கப்பட்டால், தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.