
உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பி வரும் நிலையில், “ரஷ்யா ஒருபோதும் போரை விரும்புவதில்லை” என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்தது.
அதன் உச்சக்கட்டமாக, உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான படை வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ரஷ்யா ஈடுபட்டது. அதுமட்டுமின்றி, உக்ரைன் எல்லையில் இலட்சக்கணக்கான இராணுவத் துருப்புகளையும் அந்நாடு நிலை நிறுத்தியது. இதனால் உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா தாக்கும் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய இராணுவப் படைகள் திடீரென விலக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு போர் பதற்றம் தணிந்து வருவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை அமைதி காக்குமாறு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே இந்த படை விலக்கல் முடிவை ரஷ்யா எடுத்திருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாஸ்கோவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை” எனக் கூறினார்.