
நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
குறுகிய காலப்பகுதிக்கு தனியார் நிறுவனங்கள் தனியான மின்பிறப்பாக்கிகள் இருந்தால் அவற்றினூடாக மின் உற்பத்தியை பெற்றுகொள்ள முடியும். முடிந்தளவுக்கு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெரிய அளவிலான நிறுவனங்கள் மின்பிறப்பாக்கிகள் மூலம், ஒரு நாளைக்கு நான்கு மணி நேர மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குளிரூட்டிகளைப் பயன்படுத்தும் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்
தற்போது தேவையான மின் உற்பத்தி தற்போது இடம்பெறுகின்றது என்று மின்சார சபை அறிவித்துள்ளது. அதனால் மின்வெட்டுக்கு அவசியமில்லை.
அதேவேளை, மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழக்கும் பட்சத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 100 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையம் செயலிழக்குமாக இருந்தால் மின்வெட்டு இடம்பெறாது.
அதற்கு மேற்பட்ட மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்தால் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேர மின்துண்டிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. – என்றார்.
அதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும், நீர்த் தேக்கங்களில் நீரைச் சேமிக்கும் வகையிலும் தினசரி மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றுக் காலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. ஆயினும் நேற்றிரவு மின்வெட்டுக்கு அவசியமிருக்காது என்று அறிவித்துள்ளது.
மறுபுறத்தில் களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்துக்கு 12 நாள்களாக எரிபொருள் கிடைக்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் மேலதிக பொதுமுகாமையாளரை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எரிபொருள் பொருள் பற்றாக்குறையால் துல்கிரிய மற்றும் மத்துகம மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும், சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகின்றது என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.