
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டதாகக் காட்டி சான்றிதழ் வழங்கி அதற்காகப் பணத்தைப் பெற்றவர் மாட்டிக்கொண்டார் எனத் தெரியவருகின்றது.
அயல்நாடு ஒன்றிற்கு பயணம் செய்யத் தயாரான இரு வயது முதிந்தவர்களிற்கு வீட்டிற்கு சென்று மாதிரிகளைப் பெற்றுவந்து விடுதியில் தங்கியிருப்பதுபோன்று போலிப் பதிவுகளை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளின் பெறுபேற்றை ஏற்கனவே ஒப்பமிட்ட வைத்தியரின் சான்றிதழில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சான்றிதழைப் பெற்றவர்கள் வெளிநாடு செல்லத் தயாரான சமயம் சான்றிதழைப் பெற்ற முதியவரின் உறவினரான மருத்துவர் ஒருவர் பி.சி.ஆர் சான்றிதழ் இன்றி விமானச் சிட்டை பெற்று பயணிக்க முடியாதே என்று குறிப்பிட்டு விசாரித்திருக்கின்றார்.
முதியவர்கள் நடந்த விபரத்தை ஒப்புவித்துள்ளனர். வைத்தியர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த வைத்தியரின் மாமன் முறையானவருக்கே இவ்வாறு மோசடியான சான்றிதழ் அரச வைத்தியசாலையில் வழங்கியது மட்டுமன்றி 15 ஆயிரம் ரூபா பணமும் பெறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்போது வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் மத்திய சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனத் தெரியவருகின்றது.