சமுதித சமரவிக்ர தாக்குதல் சம்பவம்; சிலோன் மீடியா போரம் கண்டனம்

கொழும்பு, பெப்.16
ஊடகவிலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீது தாக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு சிலோன் மீடியா போரம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிலோன் மீடியா போரம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படும் ஊடகத்தின் பரிணாம வளர்ச்சியில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பத்திரிகை விவரண நிகழ்ச்சி மற்றும் அரசியல் உரையாடல் நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்து வரும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது கல், தடி மற்றும் மலம் போன்றவைகளை கொண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, ஊடகத்துறையின் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கிறோம். இந்த தாக்குதலை சிலோன் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு இதற்கு முன்னரும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதனால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த அரசினதும், பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு என இங்கு அழுத்தம், திருத்தமாக சிலோன் மீடியா போரம் வலியுறுத்துகின்றது.

பல தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகத் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார். தாக்குதல் மேற்கொள்ளவந்த இனந்தெரியாத நபர்கள் சமுதிதவின் வீடு அமைந்துள்ள வீட்டு வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை மிரட்டியுள்ளனர்.

மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் வெள்ளை வேனில் வந்த நான்கு ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவது சாதாரண விடயம் என்பதனால் பொலிஸார் இது தொடர்பில் கரிசனை செலுத்துமாயின் விரைவாக விசாரணை நடத்தி குறித்த இனம்தெரியாத குண்டர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியும்.

இது தொடர்பில் அரச உயர்மட்டம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் நடவடிக்கை திருப்தியளிப்பதாகவும், நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருந்தாலும் ஊடகவியலாளார்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கதையாகி வருவது வருத்தமளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *