
அரசு கொண்டு வரும் என சொல்லப்படும் புதிய அரசியல் சாசனத்தில் மாகாண சபைகள் முறைமைகள் இருக்காது என எதிர்பார்ப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ்பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை நாம் பாதுகாக்க நினைக்கின்றோம். ஆனால் அரசு தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி, எமது நிலத்தை இல்லாமல் செய்கிறது. இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதாக சொல்கின்றனர்.
இது வருமா, வராத என்று தெரியாது. ஆனால் அந்த புதிய சட்ட வரைப்பில், இப்போது கொடுத்துள்ள சில அதிகாரம் கூட எமக்கு கிடைக்காது. அதிலும் மாகாண சபை அதிகாரம் முறைமை இல்லாமல் போகலாம்.
இதனால்தான் 13 ஆவது திருத்தம் வேண்டும் என இந்தியாவிடம் கேட்கின்றோம். அவர்கள் தான் ஒப்பந்த பங்குதாரர்கள். ஆகவே தான் அவர்களை கேட்கின்றோம். இன்று வரை எமது தீர்வு தொடர்பில் நாம் இந்தியாவுடன் பேசவில்லை.
ஆகவே, இருப்பை தக்க வைப்பதற்கு நாம் 13வது திருத்தம் வேண்டும் என்கின்றோம். அது தீர்வில்லை. இப்போது மகாவலி மற்றும் தொல்பொருள் திணைக்களம் மூலம் வடக்கு கிழக்கு நிலம் துண்டாடப்படுகிறது.- என்றார்.