
கொழும்பு, பெப் 16: அநுராதபுரம் ஓமந்தை இடையே ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பாதையின் பராமரிப்புப் பணிகளுக்காகவே, ரயில்வே வடக்குப் பாதையில் இந்தப் பகுதியில் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரம் ஓமந்தை இடையே ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பில் இருந்து புறப்படும் ரயில்கள் அனுராதபுரத்தில் நிறுத்தப்படும். யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் கிளிநொச்சியில் நிறுத்தப்படும். இதேவேளை, ரயில் பயணிகளுக்காக, அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை பஸ் சேவையொன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான பயண நேரத்தை சுமார் 40 நிமிடங்களால் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.