
‘தம்மிக்க பாணி’ தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனே, இந்த பாணி மருந்தை தயாரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கடந்த 12ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள்ளார்.
இதனை கேகாலை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கேகாலை-ஹெட்டிமுல்ல-கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்புகுட்டி கங்கானமலாகே ஹீன் பண்டா என பொலிஸார் தெரிவித்தனர்.
உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 12ஆம் திகதி இரவு வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கேகாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலத்தின் பிரேதப் பரிசோதனை கடந்த 13ஆம் திகதி கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சமந்த விஜேரத்னவினால் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி நிமோனியா ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கேகாலை மாநகர வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை கடந்த 14 ஆம் திகதி கேகாலை பொது மயானத்தில் இடம்பெற்றதாக மேலும் குறிப்பிட்டனர்.