
2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஆரம்பிக்க முயற்சித்த ‘இலங்கை மறுமலர்ச்சி’ திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் மீள ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்; கலாநிதி குணதாச அமரசேகரவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 20,000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கந்தளே சீனி தொழிற்சாலையை, இந்திய நிறுவனமொன்றுக்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எம்.சி.சி. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை, மக்களை ஏமாற்றி ஒவ்வொன்றாக அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை விட பாதகமான ஒப்பந்தமொன்றை மீள் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் பேச்சாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய மதுபான தொழிற்சாலையை இலங்கையில் அமைக்கும் நோக்கத்தில், இந்திய நிறுவனமொன்றுக்கு தொழிற்சாலையை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.