
நடுக்கடலில் சக மீனவர்களால் தாக்கப்பட்டு பரிதவித்த காலி மீனவர்கள், ஆறு நாட்களின் பின் கரை சேர்ந்துள்ளனர்.
மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக வெளியேறிச் சென்ற நீண்டநாள் மீன்படி படகொன்றிலிருந்த நபர்கள் சிலருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலில் இடம்பெற்ற இந்த முரண்பாட்டுடன் தொடர்புடைய நபரொருவர் இன்னுமொரு படகில் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் இன்று காலை கடுமையான முயற்சிகளை எடுத்து காலி மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளனா்.
காலி – தல்பே பிரதேசத்திலிருந்து ஐந்து மீனவர்களுடன் கடந்த 09ஆம் திகதி கேன்கரு என்றழைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளது.
எவ்வாறாயினும் அந்த நீண்டநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஏனையவர்கள் நால்வரையும் கடுமையாக தாக்கி, படகிலிருந்த தொழில்நுட்ப இயந்திரங்களை உடைத்துவிட்டு இன்னுமொரு படகில் தப்பித்துச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டதால், தாக்குதலுக்குள்ளான மீனவர்களினால் ஆறு தினங்களுக்கு முன்னா் இருந்து எந்தவொரு தகவல் எதுவும் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அவர்கள் அந்த படகின் மூலம் இன்று காலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளனா்.
இந்த சம்பவத்தில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த மீனவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதுடன் , காலி துறைமுக பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்றும் அபாயம்