
வாஷிங்டன்,பெப்.17:
ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை என்றும் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்கிற ரீதியில் என சர்வதேச ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா நேற்று செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த தகவலை அமெரிக்க தரப்பு மறுத்துள்ளது. ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை என்றும் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில்,
உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். அதற்கான படைகளை உக்ரைன் எல்லையில் ரஷியா தயார் நிலையிலேயே வைத்துள்ளது. அமெரிக்கா எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றார்.