மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் புதிதாக 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி மாதம் தற்போது வரை 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் மொத்தமாக 578 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றால் பெப்ரவரி மாதம் 3 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 39 பேர் மரணித்துள்ளனர்.
ஒமிக்ரோன் அலை பரவல் தொடங்கியதிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் 3 ஆகும். ஒவ்வொரு 120 நோயாளர்களுக்கும் ஒருவர் என்ற வகையில் இறப்பு இடம்பெற்றுள்ளது.
இது டெல்டா அலை பரவும் போது ஏற்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், இது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு எண்ணிக்கையாகக் காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தமது 2ஆவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருந்தால் கட்டாயமாக 3ஆவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனைய சுகாதார வழி முறைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதுவரை மொத்தமாக 12,643 மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான 2ஆவது தடுப்பு வழங்கும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
16 தொடக்கம் 20 வயதுடைய மாணவர்களுக்குக் குறித்த 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது. நேற்று மாலை வரை 799 மாணவர்கள் 2 ஆவது தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் 2 ஆவது தடுப்பூசியை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது 16 தொடக்கம் 20 வயதுடைய மாணவர்கள் அனைவரும் 2 ஆவது தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது நோக்கமாக உள்ளது.
மேலும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மக்களின் சதவீதம் மன்னார் மாவட்டத்தில் 39 சதவீதமாகக் காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் குறித்த தடுப்பூசியை வழங்கத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரையில் 59.3 சதவீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். மார்ச் 1ஆம் திகதி இடம்பெற உள்ள திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
2ஆவது தடுப்பூசி பெற்றிருந்து 3 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், 3ஆவது தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் மாத்திரமே திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.
எனவே திருவிழாவில் கலந்து கொள்ள எதிர்பார்த்துள்ள பக்தர்கள் தமது 3 ஆவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்று 2 வாரங்கள் நிறைவடைந்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.