முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் டொலர் மற்றும் நாணய தட்டுப்பாடுகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வறுமைக்குள்ளான மக்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தால் அதிகரித்துள்ளதுடன், மத்திய வர்க்கத்தினரும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டுச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடருமாக இருந்தால் இவ்வருடத்துக்குள் ஒரு ரூபாவுக்கான டொலரின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக நேற்று (16) ஊடகங்களுக்கு வழங்கிய விசேட காணொளியில் அவர் இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்கின் றன. டொலர் தட்டுப்பாடு மற்றும் நாணய தட்டுப்பாடு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. இன்று ஒரு ரூபாவுக்கான சந்தைப்பெறுமதி டொலருக்கு 250 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் 275 ரூபாவாக அதிகரிக்கலாம்.அப்போதும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வருடம் நிறைவடைவதற்குள் ஒரு ரூபாவுக்கான டொலரின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும். இதனால், இன்று பாரிய பொருளாதார நெருக்கடிகளும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, இன்று வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தால் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளும் காணப்படு கின்றன. நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன் சிரமங்களுக்கு மத்தியி லேயே வாழ்க்கையை கொண்டுச் செல்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.விவசாயத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் சுய தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மீண்டும் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருடத்துக்குள் நாங்கள் 06 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. எனினும், நாங்கள் இதுவரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால், ஜூன் மற்றும் ஜூலையில் கடனை மீள செலுத்துவதற்கு தேவையான நிதியை திரட்ட வேண்டியுள்ளது.இதேவேளை, தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு குறிப்பாக, சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் இன்று வங்கிகளின் ஊடாக முன்னெடுக்கப்படாது, உண்டியல் முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தால் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் யாப்புக்கு அமைய அதன் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்த அறிக்கை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அது தொடர்பாக விவாதமொன்றையும் நடத்துவோம்.இதற்கு கட்சி பேதங்கள் தேவையில்லை. இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஆராயாது, அதில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்து பொதுவான இணக்கப்பாடுகளையும் முடிவுகளையும் எடுக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நாங்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இன்று நாடாளுமன்றத்தின் மீதும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, நாங்கள் எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கமை, குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். 10, 15 அல்லது 20 வருடங்கள் வரை கொண்டுச் செல்லும் வகையில் ஒரே பொருளாதார நாட்டை உருவாக்க வேண்டும். அது எங்களுடைய பொறுப்பாகும். இல்லையேல், எதிர்கால தலைமுறையினர் எங்களுக்கு சாபமிடுவர் என்றார்.
