தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
காலி பொலிஸ் பிரிவில் கொனபீனுவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 1891 சேவை இலக்கத்தினை உடைய நதீகா சஞ்சீவனி என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 5 ஆம் திகதி தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 10 மற்றும் 4 வயதுகளையுடைய இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களின் கல்வி உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவின் தலைமையில் 10 இலட்சம் பெறுமதியுடைய காசோலை வழங்கப்பட்டுள்ளது.
கொனபீனுவல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் குடும்ப நல சங்கம் இணைந்து இந்த காசோலையை அவர்களிடம் வழங்கின.
இந்த நிகழ்வில் பொலிஸ் பெண்கள் பிரிவின் பதில் தலைவர் பிரஷாந்தி பெர்னாண்டோ, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரஜித ஸ்ரீ துமிந்த, காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் ஜே வேதசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.