புத்தளம் மாவட்டத்தில் இன்று (17) மூன்றாவது நாளாகவும் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இலங்கையில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதற்கு பின்னர் பெட்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு எனபனவற்றின் விலை அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், புத்தளம், சிலாபம், கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ” டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
புத்தளம் நகரில் மாத்திரம் ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள போதிலும் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுபர் டீசல் மாத்திரமே இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று பெற்றோல் கொள்வனவு செய்வதனையும. அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், பெற்றோலின் விற்பனையும் அதிகரித்திக் காணப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெற்றோலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சி எரிபொருளை சேமித்து வைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த போதிலும், தாம் விலை அதகரிப்பை மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு டீசலிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமை விலை அதிகரிப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.