
மன்னார், மடு வலயத்தில உள்ள ஒரு தேசியப் பள்ளிக்கூடத்தில நடந்த கதை உங்களுக்கு தெரியுமோ? அந்தப் பள்ளிக்கூட பிரின்சிபலின்ர மகனும் இப்ப ஏ.எல் எக்ஸாம் எடுக்கிறாராம்.
கிட்டடியில ஒரு பாடத்துக்கு எக்ஸாம் நடக்கேக்க,வேற ஒரு எக்ஸாம் மண்டபத்தில இருந்து ஒரு வாத்தியார் தன்ர போனில எக்ஸாம் பேப்பரை படமெடுத்து, எக்ஸாம் டியுட்டிக்குப் போகாத இன்னொரு வாத்தியாருக்கு அனுப்பியிருக்கிறார்.
அந்த வாத்தியார் இந்தப் பாடத்தில வலுசுழியன். அதால, கொஞ்ச நேரத்திலேயே எல்லாக் கேள்விக்கும் சரியான மறுமொழி எழுதி, அதைப் படமா எடுத்து வட்ஸப்பில அனுப்பி இருக்கிறார்.
அப்பிடி வட்ஸப்பில அனுப்பின மெசெஜ் ஆருக்குப் போனது தெரியுமோ? தேசியப் பாடசாலை பிரின்சிபலின்ர மகனுக்குத்தான். எக்ஸாமுக்கு போற மாணவர்கள் போன் கொண்டு போகக்கூடாது எண்டதுதான் சட்டம்.
ஆனால், அந்தப் பள்ளிக்கூட எக்ஸாம் டியூட்டி செய்தவையும், அந்தப் பள்ளிக்கூட அதிபரோட நல்லமாதிரி. அதால போனையும் கொண்டுபோக விட்டிட்டு, அதின்ர வட்ஸப்புக்கு வந்த மெசேஜையும் பாக்க பெர்மிசன் குடுத்திருக்கினம்.
அதைவிட இன்னொரு பகிடியும் நடந்திருக்கு. ஒரு பள்ளிக்கூடத்தில எக்ஸாம் நடக்குதெண்டால் , அந்தப் பள்ளிக்கூடத்துக்கு பொறுப்பான அதிபர் அங்காலிப் பக்கம் எட்டியும் பாக்கக் கூடாது.
ஆனால் இந்தப் பள்ளிக்கூட அதிபர் என்னெண்டால், எக்ஸாம் நடக்கிற அண்டைக்கு அங்க வந்து, பள்ளிக்கூட ரவுட்டரையும்( இணையச் சேவை வழங்கும் உபகரணம்) போட்டு விட்டிட்டுப் போயிருக்கிறார். அந்த நெட் கனெக்சனைப் பாவிச்சுத்தான் பெடியன் , வட்ஸப்பில வந்த விடையைப் பார்த்து பார்த்து எழுதியிருக்கிறார்.
ஆனால் நல்லவேளையா அதை ஒரு நேர்மையான எக்ஸாம் ஒப்பீசர் பார்த்திட்டார். அவ்வளவுதான் பெடிப்பிள்ளை பிடிபட்டுப் போனார்.
பிறகு பொலிஸுக்கு அறிவிச்சு, அவையும் வந்து விசாரிச்சால், எல்லாம் எக்ஸாம் டிட்யூட்டி செய்யிறவையின்ர அனுசரணையோடதான் அதிபர் தன்ர பிள்ளைக்காக இப்பிடியெல்லாம் செய்தவர் எண்ட உண்மை தெரியவந்திருக்கு.
இப்ப அங்க எக்ஸாம் டிட்யூட்டி செய்த கொஞ்சப் பேர் நிப்பாட்டுப் பட்டிருக்கினம். விசாரணை முடிஞ்சபிறகுதான் அவைக்கு என்ன தண்டனை கிடைக்கும் எண்டு தெரியவரும்.
இப்பிடி குறுக்கிவழியில பிள்ளையளை முன்னேற்ற நினைக்கிறது, உண்மையில அந்தப் பிள்ளைக்குத்தானே பாதிப்பு. இப்ப பிடிபடேக்க கூட ‘பிரின்சிபலின்ர’ பிள்ளை இப்பிடிச் செய்திட்டானே’ எண்டுதான் இளக்காரமாக் கதைச்சவை.
எல்லாரும் இப்பிடிச் சின்னச் சின்னப் பிழையள் விடுகிறது சாதாரணம் தான். ஆனால் அதைச் செய்ய ஐடியா குடுத்தவையும், சப்போர்ட் செய்த ஆக்களும் நல்லது செய்யிறம் எண்டு நினைச்சு அந்தப் பிள்ளைக்கு கெட்டதுதான் செய்ய்திருக்கினம். இனி அந்தப் பிள்ளை எப்பிடித் தலைநிமிர்ந்து ஊரில நடக்கும்?
அதோட எக்ஸாம் டியூட்டிக்கு போனாமாம், டியூட்டி பார்த்தமாம், வந்தமாம் எண்டு இருக்காமல் இப்பிடி பிரின்சிப்பலின்ர மகன், மகள் எண்டெல்லாம் எக்ஸாமில தில்லுமுல்லுப் பண்ண விடுகிறது எந்த வகையில நியாயம்? வேலியே பயிரை மேயலாமோ?