
கொழும்பு, பெப் 18: பிரபல போதை பொருள் வியாபாரி ‘தெமட்டகொட’ ருவானின் ரூ.7.9 கோடி பெறுமதியான சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட’ ருவானிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி கூறுகையில் “சந்தேகநபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பின்னர் பெரியளவில், போதைப்பொருள் கடத்தலை மேற்கொன்டுள்ளார்.
இவரிடம் இருந்து, ரூ. 90 மில்லியன் பெறுமதியான 9 அதி சொகுசு வாகனங்கள், 1.5 கிலோ தங்கம், மூன்று நிலங்கள், ரூ.160 மில்லியன் ரொக்கம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரச சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
முன்னதாக, இன்னொரு பிரபல போதைப் பொருள் கடத்தல் வியாபார, வெலே சுதாவிடம் இருந்து ரூ.180 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுவே, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய பெறுமதியான சொத்துகளாக இருந்தது.