
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட ருவான்’ வசமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 790 மில்லியன் ஆகும்.
சந்தேகநபர் 2011ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதன் பின்னர் சட்டவிரோத வியாபாரத்தை ஆரம்பித்து 2017ஆம் ஆண்டு முதல் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 90 மில்லியன் பெறுமதியான 09 அதி சொகுசு வாகனங்கள் உட்பட கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அரச சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
3 நிலையான வைப்புக்களில் இருந்து ரூ. 90 மில்லியன் பணம், ரூ. 20 மில்லியன் பெறுமதியான 1.5 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூ.160 மில்லியன் பெறுமதியான மூன்று நிலங்கள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அவருக்கு சொந்தமான பல ஹோட்டல்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தனக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்த, சிஐடி அதிகாரிகளுக்கு 50 மில்லியன் ரூபா பணம் கொடுக்கவும் அவர் முயன்றுள்ளார்.
முன்னதாக, வெலே சுதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.180 மில்லியன் பெறுமதியான சொத்துக்களே, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய பெறுமதியான சொத்துகளாக கருதப்பட்டது.