கஜேந்திரனுக்கு எதிராக வழக்குத் தொடர பெற்றோர்கள் முடிவு

யாழ்ப்பாணம், பெப் 18: முன்னாள் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய தலைவரும், இந்நாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா. கஜேந்திரன் மீது வழக்குத் தொடர, அவரால் புலிகளுக்கு போராட வலுக் கட்டாயமாக அனுப்பப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, கஜேந்திரனால் புலிகளுக்கு அனுப்பப்பட்டு உயிரிழந்த மாணவன் ஒருவனின் தந்தை கூறுகையில் “எனது மகன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சாதாரண தரம் கல்வி கற்று வந்தார். அக் காலப்பகுதியில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த கஜேந்திரன் எனது மகனை வலுக்கட்டாயமாகப் பிடித்து புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைத்தார். எனது மகன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த சில ஆண்டுகளில் உயிரிழந்தார். எனது மகனின் மரணத்துக்கு கஜேந்திரன்தான் பொறுப்புக்கு கூற வேண்டும். அவர் மீது வழக்குத் தொடர உள்ளேன்’ என்றார்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிரிழந்த லக்சன் என்ற மாணவனின் தந்தை கூறுகையில் ”   யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த கஜேந்திரன் எனது மகனை மிரட்டி, புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைத்தார். எனது மகன் இறுதி போரில் உயிரிழந்தார். இவ்வாறாக, நூற்றுக் கணக்கான பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களை கஜேந்திரன் புலிகளுக்கு அனுப்பி கொல்லக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். கஜேந்திரனால் புலிகள் அமைப்புக்கு அனுப்பி கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை ஒன்றிணைத்து அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

இது தொடர்பாக பல்கலைக் கழக மாணவன் ஒருவரின் தாயார் கூறுகையில் ” யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கஜேந்திரன் இருந்தபோது, “நீ முன்னால் போ நான் பின்னால் வந்து போராடுகிறேன்’ என எனது மகனை மூளைச் சலவை செய்து புலிகள் இயக்கத்துக்கு கஜேந்திரன் அனுப்பி வைத்தார். எனது மகன் போரில் இறந்துவிட்டார். ஆனால், கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி சொத்து சுகங்களை அனுபவித்து வருகிறார்’ என்றார் அவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *