
கொழும்பு, பெப்.18:
நாட்டின் உயர்கல்வி முறையானது உலகளாவிய தரத்திற்கு தரப்படுத்தல் செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் கூறுகையில்,
தற்போதைய பல்கலைக்கழக அமைப்பு மாணவர்களுக்கு தாங்கள் விரும்பும் கற்கைகளைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது அவர்கள் படிக்க விரும்பும் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுக்கவோ வாய்ப்பளிக்கவில்லை. “தற்போது மாணவர்களின் திறமை மற்றும் ஆர்வம் இரண்டும் இருந்தாலும் அவர்கள் விரும்பும் பல்கலைக்கழகம் அல்லது கற்கைகள் துறைகளை தேர்ந்தெடுக்கும் திறன் அவர்களுக்கு இல்லை.
மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்கலைக்கழக கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும் . அதிக மாணவர்களை ஈர்க்கும் பல்கலைக்கழகங்கள் அதிக அரசு சார்ந்த ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற வேண்டும் என்பதோடு, இது ஆரோக்கியமான போட்டித் தன்மையை உருவாக்குவதோடு, பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை மேம்படுத்தவும் வசதிகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படும் .
நாட்டில் அரசாங்கம் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசாங்கங்கள் மாறும்போது அந்தக் கொள்கைகள் மாற்றக்கூடாது. மஹபொல நிதியத்தை ‘லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம்’ என மறுபெயரிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது பாராட்டப்பட வேண்டியதாகும்.
பல வருடங்களாக குறைந்த வருமானப் பின்னணியில் இருந்து வரும் பல மாணவர்கள் இந்த நிதியிலிருந்து பயனடைந்துள்ளனர். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கடனுதவி பெற வேண்டிய காலகட்டத்தைப் போல் அல்லாமல் அதன் மூலம் பயனடைந்த எம்.பி.க்கள் இங்கு உள்ளனர் என்றார்.