
இலங்கை அரசியலில் முத்தரப்புக் கூட்டணிகளின் உருவாக்கங்களை விரைவில் காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரச கூட்டணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளது.
பங்காளிக் கட்சிகள், தமது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அத்துடன் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் பதவி துறக்கத் தயாராகிவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டில் அரச பங்காளிக் கட்சிகள் பங்கேற்காமையானது, பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலைக் கோடிட்டுக் காட்டுகின்றது. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உடைவை விரைவில் எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிவழி செல்லக்கூடும் எனவும், ஏனைய கட்சிகள் இணைந்து புதிய கூட்ட ணியை அமைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதனடிப்படையில், அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளைத் தயாரித்து எதிர்வரும் 2ஆம் திகதி அரசி டம் கையளிக்க இந்த அணியினர் தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக மற்றுமொரு சந்திப்பை அமைச்சர் விமல் வீரவன்ஸ அல்லது உதய கம்மன்பில ஆகியோரின் வீட் டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது