மக்களுடைய நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம்; ஹெக்டர் அப்புஹா சீற்றம்

விவசாயிகளின் நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஹெக்டர் அப்புஹாமி கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் பிரஜைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, அதன்மூலம் சேகரித்த ஊழியர் சேமலாபநிதியத்தில் வரி அறவிடுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஐக்கிய மக்கள் சக்தியினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனவே கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு உதவிய ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். அதேவேளை ஊழியர்களுக்குச் சொந்தமான நிதியை தமது உடைமையாக்கிக்கொள்வதில் ஏழு மூளைகளைக்கொண்டவர் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதன் காரணமாக, மீண்டும் இந்த வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்படக்கூடும்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் அனைத்துத்தரப்பினரும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.
இன்றளவிலே நாட்டின் பொருளாதாரம் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. வரலாற்றைப் பொறுத்தமட்டில் அனைத்துத்தரப்பினரும் இணைந்து உணவு உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவடையச்செய்ததுடன் பல்வேறு துறைசார் அபிவிருத்தியின் ஊடாகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தினார்கள்.

அதேபோன்று கடந்த காலங்களில் வெளிநாடுகள் அல்லது சர்வதேசக்கட்டமைப்புக்களிடமிருந்து கடனுதவிகளைப் பெற்றுக்கொண்டபோது, நாட்டை முன்னேற்றும் வகையிலான அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதே அதன் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
இருப்பினும் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சிறிதும் வெட்கமின்றி சீனா, இந்தியா, அமெரிக்கா, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளிடம் கடனுதவிகளைக் கோருகின்றது.

அடுத்ததாக இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாக நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சிகண்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாம் விவசாயிகளுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்ததுடன் விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

ஆனால், விவசாய நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்போவதாகவும் அவர்களுடாக விவசாயிகளுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கப்போவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

இராணுவத்தினர் தமக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் இராணுவத்தினர் ஊடாக விவசாயம் முன்னெடுக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல.

இத்தகைய சம்பவங்களால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதுடன் பாதாளக்குழுக்களினால் நாடு நிர்வகிக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
இவ்வாறு நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், அவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திப்பாதையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கு அவசியமான செயற்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *