
யாழ்ப்பாணம், பெப்.19
வடமாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் அனுபவித்த இன்னல்களை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் கூறியதாவது,
ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டி அணிந்து வந்திருக்கிறார்கள். இது ஒரு ஜனநாயகத்தின் வெளிப்பாடு. நாம் ஒரே குடையின் கீழ் வாழ்கின்ற நிலையில் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம்.
ஆனாலும் நாட்டில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் உரிமைகள் இந்த நாட்டிலே உறுதி செய்யப்படவேண்டும். ஈராக்கிடம் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா போர் தொடுத்ததை எல்லோரும் அறிவீர்கள்.
அங்கு என்ன இடம்பெற்றது? ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா சந்தேக செய்தியை வெளியிட்டு அதை உண்மையாக்கும் விதமாக போர் தொடுத்தது. ஊடகம் ஜனநாயகத்தின் தூணாக கருதப்படுகின்ற நிலையில் தகவல்களை உறுதி செய்து வழங்க வேண்டும்.
ஆகவே, வடக்கு ஊடகவியலாளர்களை தொழில்நுட்ப ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் முன்னேற்றுவதற்கு என்னால் இயன்ற பங்களிப்பை செய்வேன் என்றார்.