யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்கள அரசியல்வாதிகள்

யாழ்ப்பாணம், பெப் 19: தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றுக்காக இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் அவர், அங்குள்ள தொழிலாளர்களுடன் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

முன்னதாக, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்த ஊடகத்துறை அமைச்சர், அவர்களது தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கினார்

இதேநேரம், கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் வட மாகாணத்திற்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கால்நடை வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் அவர் கலந்துரையாடினார்.

இதன்போது கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால், முட்டை சார்ந்து கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் கலந்துரையாடினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட 75 உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தலைவரின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு வருகை தந்திருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *