
யாழ்ப்பாணம், பெப் 19: அரச அதிகாரிகள் பக்கச்சார்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
இவ்வாண்டு மகாசிவராத்திரி பூசை நிகழ்வுகளுக்கு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை துரதிருஸ்டவசமான கவலைதருகிற விடயமாகும்.
கொரோனா தாக்கத்திலிருந்து நாடு வழமைக்கு திரும்பிவரும் சூழலில், இந்துக்களின் சிறப்புவாய்ந்த மகாசிவராத்திரி விரத பூசைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களை இலக்கு வைத்து பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறித்து எனது கண்டனத்தை வெளிப்படுத்துகிறேன்.
மன்னார் மாவட்டத்தின் மற்றுமொரு திருவிழா நிகழ்வுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டு, திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி பூசைகளுக்கு மாத்திரம் கட்டுப்பாடுகளை விதிப்பதானது பக்கச்சார்பான செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் மக்கள் 3 கொவிட் தடுப்பூசிகளை பெற்றமைக்கான தடுப்பூசி அட்டையை கொண்டிருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் மக்களை குழப்பமடையச் செய்யும் வகையிலும் அரசாங்கத்தின் அறிவிப்பையும் மீறும் வகையிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி பூசை நிகழ்வுகளுக்காக விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய இறுக்கமான கட்டுப்பாடுகள் இந்துக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் கவலையை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேலும் கடந்த ஆண்டிலும் இத்தகைய பக்கச்சார்பான வகையில் திருக்கேதீஸ்வர பக்தர்களுக்கு மாத்திரம் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனவே இவை தொடர்ச்சியான திட்டமிட்ட செயல்களாகவே இந்துக்கள் கருதுகின்றார்கள்.
அரச அதிகாரிகள் பக்கச்சார்பில்லாமல், மத விழுமியங்களை சமமாக மதித்து செயற்பட வேண்டிய பொறுப்புக்குரியவர்கள். மாறாக இத்தகைய செயற்பாடுகள் தமிழர்களுக்குள் மதப்பிரிவினையை இன்னும் வலுப்படுத்தும் ஆபத்து காணப்படுகிறது.
எனவே, திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பூசைகளுக்கு செல்லும் பக்தர்களின் நம்பிக்கை, மத விழுமியத்தை மதித்து மாவட்ட செயலக அதிகார மட்டம் செயற்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.