
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
அவரது விஜயத்தின்போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பதவிக்கு கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட டொனால்ட் லூ, கடந்த நவம்பரில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.
கலந்துரையாடல்களின்போது இலங்கையுடனான தமது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலிலும் தமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வதிலும் தமிழ் மக்களுடன் அமெரிக்காவும் இணைந்துகொள்வதுடன் அதற்காகக் குரல்கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, டொனால்ட் லூ இலங்கைக்கான முதலாவது விஜயத்தை எதிர்வரும் மார்ச் மாதம் மேற்கொள்ளவுள்ளார்.