
கொழும்பு, பெப் 19: அநுராதபுரம்- வவுனியா புகையிரத பாதையை சித்திரை புத்தாண்டு வரை மூட வேண்டாம் என்று புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, புகையிரத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மருதானையில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியது: புகையிரத பாதை திருத்த பணிகளுக்காக வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அநுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான புகையிரத பாதையை மூட புகையிரத திணைக்களம் தீர்மானித்தது.
சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு தமிழர்கள் தங்களின் சொந்த பிரதேசங்களுக்கு செல்வதால் எதிர்வரும் முதலாம் திகதி அநுராதபுரம்- வவுனியா வரையான புகையிரத பாதையை மூடவேண்டாம் என புகையிரத திணைக்களத்திடம் வலியுறுத்தினோம்.
எமது கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி அநுராதபுரம் -வவுனியா வரையான புகையிரத பாதையை தற்காலிகமாக மூடுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால், சித்திரை புத்தாண்டு நிறைவு பெறும் வரை அநுராதபுரம்-வவுனியா புகையிரத பாதையை மூட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.