வட, கிழக்கில் தொல்பொருள் பகுதிகளை அளவீடு செய்வது தொடர்பாக பௌத்த ஆலோசனை மகா சபையுடன் ஜனாதிபதி ஆலோசனை

கொழும்பு, பெப் 19: வட, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக பௌத்த ஆலோசனை மகா சபையுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் புதிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தல், பராமரித்தல், ஞாயிற்றுக்கிழமை தம்ம பாடசாலைகளை நடத்துதல், விகாரை மற்றும் தேவலகம் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதில் தனித்தனியாகக் கவனத்தில் கொள்ளப்பட விஷயங்கள், ஒவ்வொரு மதத்தைப் பொறுத்தமட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மகாநாயக்க தேரர் மற்றும் பிராந்திய சசனரக்ஷக பலமண்டல பதிவாளர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பௌத்த விகாரைகளை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, வட கிழக்கில் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ், தொல்பொருட்களைக் கொண்ட இடங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதன்போது, தொல்பொருள் கட்டளைச் சட்டத் திருத்தம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானம் மீளாய்வு செய்யப்பட்டு, அடுத்த சில மாதங்களில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அனுரமனதுங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை ஆய்வு செய்ய 484 கோரிக்கைகள் கிடைத்துள்ளன. அவற்றில் 64 இடங்களின் அளவீடுகள் நிறைவடைந்துள்ளதுடன், 22 இடங்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக சர்வேயர் ஜெனரல் ஆரியரத்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

பௌத்த ஆலோசனை சபை உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *