
சென்னை, பெப்.19
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் தீவிரமாக இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. டிசெம்பர் மாதத்தில் தினமும் 180 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
பயணிகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. தொற்று மூன்றாவது அலையால் ஜனவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்களின் இயக்கம் 100 என்ற அளவில் இருந்தது.
இந்நிலையில் தொற்று பரவல் அதிகரித்த வேகத்தில் குறைந்து வருவதால், பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் போன்றவைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
அதனால், பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. விமானங்கள் இயக்கமும் அதிகரித்துள்ளது. அதேபோல், சர்வதேச விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இப்போது, சிறப்பு விமானங்களின் இயக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.