இலங்கை அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சித்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவின் வழிநடத்தலுடன் நிதி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களம், வணிக திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் இந்த தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக்கான குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
உரிய அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய 11 உப குழுக்கள், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஊடாக, பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, தேசிய வர்த்தக பேச்சுவார்த்தை குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தின் ஆரம்பமாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்தும்போது விநியோக கொள்ளளவை பலப்படுத்துதல், சந்தை பிரவேசம் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சம்பிரதாயபூர்வமான மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ளும் அதேவேளை தெற்கு, தென்கிழக்கு, மேற்கு ஆசியாவுடனான ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் , இலங்கையின் பொருட்கள் வியாபாரம் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை கைச்சாத்திடவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் கைசாத்திடப்படவுள்ள உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் தொடர்பிலான 12 ஆவது சுற்றுப் பேச்சு அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது காணப்படும் இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு மேலதிகமான விடயங்களை இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.