வடக்கு கிழக்கில் பாரிய மக்கள் அலையுடன் போராட்டம் வெடிக்கும்…! சிறீதரன் எம்.பி எச்சரிக்கை…! samugammedia

மட்டக்களப்பு மயிலத்தமடு,  மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு  இன்றேல் வடக்கு கிழக்கில்  பாரிய  மக்கள் அலையுடன் போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு,  மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்ட களத்திற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மடடு மயிலத்தமடு, மாதவனைப்பகுதிகளில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையானது அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பெரும்பான்மையின விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள தமிழர்களுடைய கால்நடைகளும் பெரும்பான்மையின விவசாயிகளின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியாகும்.

அதேவேளை அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புகளையும் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவரும் நேரத்தில் திருகோணமலையிலும் அதேநிலைமையினை எதிர்கொண்டுள்ள காலச்சூழலில் தொடர்ந்தும் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பெரும்பான்மையின விவசாயிகளின் நடவடிக்கைக்கு எதிராகவே எதிராகவே மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது எங்களது கடமையாகும்.இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

ஜனாதிபதி அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களை அகற்றுமாறு கடந்த வாரம் கூறிய பின்னரும் அப்பகுதியில் புத்தர்சிலையினை வைத்தார்கள். சட்ட விரோதமாக அம்பிட்டிய தலைமையிலான அராஜக்குழு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக  சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாங்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய  போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *