
கொழும்பு, பெப் 19: ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தகர்க்கப்பட்டு வருகிறது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அரசு இதுவரை அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று பேராயர் மால்கம் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்த மறுநாள், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இலங்கைக்கு வந்த அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அன்றைய தினமே விஜித் மலல்கொட உள்ளிட்ட மூவரடங்கிய குழுவொன்றை இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு நியமித்தார். இதுவே முதல் குழு அறிக்கை.
பின்னர் சில காலம் கழித்து பாராளுமன்றத்தில் இருந்து இன்னொரு குழு அறிக்கை வெளியிட்டது . அதன் பிறகு தேசிய சுதந்திரத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் மூன்றாவது அறிக்கை வந்தது. நான்காவது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வந்தது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் இறுதித் தொகுதி கிடைக்கப்பெற்றபோது, தற்போதைய ஜனாதிபதி அமைச்சர் உபகுழு என்ற மற்றொரு குழுவை நியமித்தார். அறிக்கைக்கு பின் அறிக்கை வந்ததே தவிர எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட தருணத்தில் இன்று நாம் அமைதியாக இருக்க வேண்டுமா?
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சாட்சியமளித்த, புலனாய்வு அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த தாக்குதலை முன் கூட்டியே அறிந்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
இதேநேரம், ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சாட்சியங்கள் இந்த அரசாலும், தற்போதைய சட்டமா அதிபராலும் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக, இந்த அரசு எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.