
வீதி விபத்துக்கள் என்பது பயங்கரவாதத்தை போன்றது. எனவே விபத்துக்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், நாளொன்றுக்கு நால்வரை படுகொலை செய்தனர். மேலும் பலரை காயப்படுத்தினர். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றினர்.
அதேபோன்று விபத்துக்களால் ஒவ்வொரு நாளும் எழுவர், எண்மர் உயிரிழப்பதுடன் 10 பேர் காயமடைகின்றனர்.
சில நேரங்களில் விபத்துக்களால் 11, 12 பேர் மரணிப்பதுடன், 40, 50 பேர் காயமடைகின்றனர். வீதி விபத்துக்களையும் வீதி பயங்கரவாதமாக அடையாளப்படுத்தலாம்.
கடந்த வருடம் மட்டும் 22,000 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களால் 2,470 பேர் உயிரிழந்தனர். அது மட்டுமன்றி 14,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் நாடு முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையிலிருந்த போதிலும் 22,000 விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.
இதனை ஆராய்ந்துப் பார்க்கும்போது நாளொன்றுக்கு 60 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. நாளொன்றுக்கு 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். 7 பேர் வரை உயிரிழந்தனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றது. இவ்வருடம் அநேகமாக பயணக்கட்டுப்பாடு அமுலில் இல்லை. இதன் காரணமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றுக்கு விபத்துக்களால் 10 பேர் உயிரிழப்பார்களாயின் வருடமொன்றுக்கு 3,650 ஆக அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒருவரது உயிரை பணத்துடன் ஒப்பிட முடியாது. அதேபோன்று விபத்துக்களால் வாகனங்களுக்கு மில்லியன் ரூபாய் சேதம் ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி விபத்து தொடர்பிலான வழக்கு முடியும் வரை குற்றவியல் வழக்கு முன்னெடுத்து செல்லப்படும். மரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளுக்காக சாதாரணமாக மில்லியன் கணக்கிலான பணம் ஒதுக்கப்படுகிறது.
வருடமொன்றுக்கு 3,450 விபத்துக்களால் உயிரிழப்பார்களாயின் அவர்களுக்காக 350 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
10 வருடங்களுக்கு இந்த எண்ணிக்கையில் விபத்துக்கள் பதிவாகுமாயின் 36,500 மில்லியன் ரூபாய் பணம் அதற்காக செலவிடப்படும். இந்தத் தொகை பணமானது மக்களின் வரிப்பணத்திலேயே செலவிடப்படுகின்றது.
மறு பக்கத்தில் எமது நெருங்கிய உறவுகள் எம்மைவிட்டு பிரிந்துச் செல்ல நேரிடுகிறது. எனவே விபத்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
சாரதிகளின் கவனயீனமே விபத்துக்களுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே விபத்துக்களை தடுப்பதற்காக விசேட திட்டங்களை போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து எதிர்வரும் மாதங்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.