பூநகரியில் சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்…! samugammedia

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று நூறாவது நாளில் மேற்பபடி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவில்  1200ஹெக்டேயர் பரப்பளவில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதற்கு டோக்கியோ நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிராஞ்சி, பொன்னாவெளி, வலைப்பாடு, வேரவில்,பலாவி அனைத்து மக்கள் ஒன்றியம் சார்பாக பொது மக்கள் இன்று நுாறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நிறுவனத்தினரால் தங்களது பிரதேசங்களில் சுண்ணகல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாயின் தங்களது பூர்வீக கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து பிரதேசங்கள் உவராகி வாழ முடியாத சூழல் ஏற்பட்டு தாம் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும், சீமெந்து தொழிற்சாலையின் தூசு உள்ளிட்ட கழிவுகளால் நோய்த்தாக்கம் ஏற்படும் என்றும் மற்றும் தங்களது விவசாய முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதோடு, கடல் தொழிலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்து அதற்கு அனுமதிக்க கூடாது என்று கோரிக்கையினை முன்வைத்து போராடி வருகின்றோம் எனத் தெரிவித்தனர். 

இன்று எங்களது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நூறாவது நாள் தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள பல அமைப்புக்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புக்கள்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என இன்றைய தினம் எங்களுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்கள் வேரவில் மண்ணை சுடுகாடு ஆக்காதே, வேண்டாம், வேண்டாம் சீமேந்து கம்பனி வேண்டாம், சுண்ணக்கல் அகழ்வை உடன் நிறுத்து, அமைச்சரே எங்கள் கிராமங்களை விற்க இரகசிய கூட்டம் நடத்தாதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *