
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக் கட்சி அங்கீகரிக்கப்பட்டதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது:
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக் கட்சி 2020ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்ய விண்ணப்பித்தது. அப்போது, அக் கட்சி உரிய தகமையை கொண்டிருக்கவில்லை எனகே கூறி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 2021 ஆம் ஆண்டு அக்கட்சி மீண்டும் விண்ணப்பித்தபோது அதன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.
ஒரு தடவை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அக்கட்சியால் அடுத்த ஆண்டு விண்ணப்பிக்க முடியாது என தேர்தல்கள் தொடர்பான சட்டம் கூறுகின்றது.
இதன் அடிப்படையில், எவ்வாறு விக்னேஸ்வரனின் கட்சி அங்கீகரிக்கப்பட்டது என்று, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் கேள்வி எழுப்பியபோது, நிராகரிக்கப்பட்ட கட்சியின் விண்ணப்பத்தை மறு ஆண்டே தேர்தல்கள் ஆணைக்குழு அதை எவ்வாறு ஏற்றுக்கொண்டது எனத் தெரியவில்லை எனப் பதிலளித்துள்ளார்.
இதேநேரம் இக் கேள்வியை எழுப்பிய தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹூலை இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘2020ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் பல கட்சிகள் விண்ணப்பித்தனர் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியின் பதிவு எதற்காக நிராகரிக்கப்பட்டதோ அதே காரணத்திற்காக பொ.ஐங்கரநேசன், இராமநாதன் போன்றவர்களின் கட்சிகளின் பதிவுகளும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு கட்சிக்கு மட்டும் சலுகை செய்தால் அது 2020ஆம் ஆண்டு அதாவது நாம் பதவியில் இருந்தபோது விக்னேஸ்வரனின் கட்சி பதிவிற்கு விண்ணப்பித்து நிராகரிகப்பட்டது என்ற உண்மையை மறைத்ததாக அர்த்தப்படும் எனபதனாலேயே இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன்’ என்றார்.
இந்த விடயம் தொடர்பில் தற்போதைய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது ,
சி.வி.விக்னேஸ்வரன் 2020ஆம் ஆண்டு கட்சி விண்ணப்பித்தமைக்கான எந்த ஒரு பதிவோ ஆவணமோ ஆணைக்குழுவில் இல்லை. அதன் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது என்றார்.