இளைஞர்கள் சமூகத்தை நெறிப்படுத்தப்பட வேண்டும் அப்போது தான் எமது சமூகம் சீராக இருக்கும் என யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியா குழுமத்தின் புதிய கட்டட திறப்புவிழா யாழில் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகம் என்பது வெறும் பொழுது போக்கு இல்லை. மக்களை நெறிப்படுத்தவும், மக்களை இணைக்கும் பாலமாகவும் அது செயற்பட வேண்டும். நாம் கற்றுகொள்ளும் விடயங்களை எமது நாட்டுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், புலம் பெயர் தமிழ் சொந்தங்களுக்கும் சென்றடையும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.
நாம் சரியான நேரத்தில், உண்மையாக, நேர்த்தியாக எமது பணியை செய்தாலே அது அடுத்த சந்ததிக்கும் கொண்டு செல்லப்படும்.
இந்த கொண்டு செல்லும் பணிக்கு இளைஞர்கள் முக்கியமானவர்கள். எனினும் அவர்களுக்கும் மூத்தவர்களுக்கும் தற்போது இடைவெளி காணப்படுகிறது. அது இல்லாமல் போனாலே எமது பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கொண்டு செல்லப்படும்.
விவசாயம், கலாச்சாரம் இரண்டுமே முக்கியமானது. அதனை எமது உறவுகளுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் நாம் செயற்பட வேண்டும்.- என்றார்.