
கிளிநொச்சி, பெப்.20
கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டடிருந்தனர்.
கொட்டும் மழையின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்தவாறு போராட்டத்திலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிப்போ சந்தியில் கவனயூர்ப்பில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிய உரிமைகள் செயலகத்திற்கான மகஜரை வேலன் சுவாமிகளிடம் கையளித்தார்.
போராட்டத்தின் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்க செயலாளர் லீலாதேவி குறிப்பிடுகையில்,
இந்த போராட்டத்திற்காக பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் குறித்த அழைப்பினை ஏற்று பலர் இங்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்றைய போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தந்திருக்கவில்லை.
ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிற்கு ஒரு செய்தியை நாங்கள் தருகின்றோம். இந்த போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு கடந்த காலங்கள் போன்று இல்லை. உங்கள் வீட்டிலும் இது போன்று சம்பவங்களும், காணாமல் ஆக்கப்படுதலும் இல்லாதிருக்கவும், பேரப்பிள்ளைகள், அடுத்த சந்ததிக்கு இவ்வாறு நடந்தேறக்கூடாது என்பதற்காகவுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.