
கொழும்பு, பெப் 21: தற்போதைய அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் வகையில் ஒரு கோழிப்பண்ணையைக் கூட நடத்த முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
புத்தளத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசாங்கம் தவறிவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்பு, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பலமான ஜனாதிபதி என்ற “பிராண்ட்” உருவாகியது. இதைத் தொடர்ந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை தண்டிப்பார் என மக்கள் நம்பினார்கள். ஆனால், மக்களின் நம்பிக்கைக்கு ஜனாதிபதி குந்தகம் விளைவித்து விட்டார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அவர்கள் இருவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது. மக்கள் அரசாங்கம் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.
இந்த ஏப்ரலுடன், ஈஸ்டர் தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும்போது, முழு வழக்கையும் மறக்க நேரிடும்.
நாட்டில் யாருமே பொறுப்பேற்க விரும்பாத அராஜகமான சூழல் நிலவுகிறது. சில அமைச்சர்கள் பட்டப்பகலில் வாக்குவாதம் செய்கிறார்கள். உதய கம்மன்பில, காமினி லொக்குகே போன்ற அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினைகளை ஏற்படுத்தி ஒருவரையொருவர் அச்சுறுத்துகிறார்கள்.
ஒரு அமைச்சரால் ஜனாதிபதியை கூட சந்திக்க முடியாது என சிலர் என்னிடம் கூறுகிறார்கள். சில அமைச்சர்கள் எட்டு மணிக்கு அலுவலகம் சென்று ஏழு மணிக்கு வீடு திரும்பி 1 மணிக்கு மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்கள்.ஒரு நாடு இயங்கும் முறை இப்படி இருக்கக் கூடாது. ஒரு நாடு அல்ல, ஒரு கோழிப்பண்ணை கூட இப்படி நடத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.