
முல்லைத்தீவு, பெப்.21
இந்தியாவின் தேசிய நலன்களுக்கும் – தேசிய பாதுகாப்புக்கும் தமிழர் தாயகத்தைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் நாம் துணைபோக மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு முல்லைத்தீவில் நடைபெற்றது. அங்கு கஜேந்திரகுமார் கூறுகையில்,
13ஆவது திருத்தமும் ஒற்றையாட்சியும் இந்தியாவினுடையவை அல்ல. அது தமிழினத்துக்கு உரிய விடயங்கள். எங்களுடைய தேச அங்கீகாரத்தை நாங்கள் பெறாவிட்டால் இந்த இனம் அழியும். தேசத்தை அழிப்பதுதான் எதிரியின் நோக்கம். தேசத்தின் அங்கீகாரம் மட்டும்தான் தமிழ் இனத்தைக் காப்பாற்றும்.
இன்று இலங்கையின் பொருளாதார பலம் சிதறிவிட்டது. சாப்பாட்டுக்குக் கெஞ்சவேண்டிய நிலைக்கு போய்விட்டது. இந்தியாவிடம் போய் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 500 மில்லியன் டொலர் கடனைப் பெற்று வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 500 மில்லியனை கட்டாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் அழியும் இந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசு இருக்கின்றது.
அரசாங்கத்தை காப்பாற்றும் நிலையில் இந்தியா இருக்கின்றது. இந்தியாவுக்கு விசுவாசமாக செயல்படுகின்ற அமைப்புக்கள் இருக்கின்றன. அந்த 6 அமைப்புக்கள் இந்தியாவிடம் சென்று இன்றைய காலகட்டத்தில்தான் சொல்ல வேண்டும் – இலங்கை அரசு உங்கள் காலில் விழுந்திருக்கின்றது. தமிழர்களுக்கு ஏதும் செய்யவேண்டும் என்றால் இன்றுதான் செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும். இதனையும் விட சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? இதனையும் விட ஒருபேரம்பேசல் இருக்குமா?
ஆனால், அந்த ஆறு அமைப்புக்களும் என்ன விரும்புகின்றார்கள். சிங்களவர்கள் விரும்புகின்ற 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சொல்லித்தான் கேட்கின்றார்கள். சம்பிக்க ரணவக்க சிங்கள – பௌத்த வெறிகொண்ட நபர். அந்த சம்பிக்க ரணவக்ககூட 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று மாநாடு வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த 13ஆம் திருத்தம் எந்தளவுக்கு மோசமான விடயம் என்பதை இதை வைத்தாவது புரிந்துகொள்ளலாம். இதனை தெரிந்திருந்தாலும் நீங்கள் முகவர்கள் என்றபடியால்தான் இதனை வலியுறுத்துகின்றீர்கள். தமிழ் உணர்வு அல்லது தமிழர்களுக்குரிய அபிலாசைகளில் உங்களுக்கு விரும்பம் இருந்தால் – அதற்காக நீங்கள் ஆணையைப் பெற்ற வர்கள் என்று கொஞ்சமாவது மதிப்பிருந்தால் இந்த துரோகத்தை செய்யமாட்டீர்கள்.
பேரம்பேசலை பற்றி நாங்கள் பேசும் போது இந்த இலக்கை எவ்வாறு அடை யப்போகின்றீர்கள் என எங்களிடம் கேட் கின்றபோது பேரம் பேசல் ஊடாக அடை யப்போகின்றோம் என்று கூற எங்களை பார்த்து நக்கலடித்தார்கள். இன்று அந்த பேரம் பேசலுக்கான சந்தர்ப்பம் கண் ணுக்கு முன்னால் இருக்கின்றபோது பேரம்பேசாமல் நேர்மாறாக இந்த இனத்தை அழிக்க விரும்புகின்ற தரப்பு விரும்பும் நிலைப்பாட்டை வலியுறுத்த விரும்புகின்றார்கள்’ என்றும் கூறினார்.