
சென்னை, பெப்.21
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும், பல்வேறு விதத்தில் துன்புறுத்துவதும், படகுகளை, மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் பல ஆண்டுகளாக நீடிப்பது மிகவும் கவலைக்குரியது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களில் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழக மீனவக் குடும்பங்கள் துயரத்தில் இருக்கிறார்கள்.
அண்டை நாடான இலங்கை நாடும், அந்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்று இந்தியா நினைத்து செயல்படும் அதே சமயம் இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்தியா, இலங்கையோடு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்திய மீனவர்களுக்கு இனிமேல் இலங்கையால் எவ்வித பாதிப்பும் இருக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் பேச வேண்டும். அதன் பின்னரே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்து மேம்படுத்தலாம் என்றார்.